மடியாசனம் – மழலையர்க் கவிதைகள்
தொகுப்பு 4
பா. தேவிமயில் குமார்
நேரம்
இரவையே
இரைச்சலாக்கும்
சத்தங்களுக்கு
நடுவே…..
வீர், வீர் என்று
வீறுகொண்ட குரல்
அந்த மருத்துவமனையில்
அழகாய்க் கேட்கிறது ! அது
இரைச்சலல்ல ! ஆனந்தப்
பேரிரைச்சல், ஆம்
பிறந்த குழந்தையின்
முதல் அழுகை !
கரு
கருவில் இருக்கும்
குழந்தை பெண்
என்றதும் கலைத்து விடும்
அருவருப்பான
சமுதாயத்தில் தான், நாம்
சம உரிமையைப் பற்றி
சதா, சர்வ காலமும்
சொல்லிக் கொண்டே இருக்கிறோம் !
முரண்
ரிங்க …. ரிங்கா…..
ரெய்ன், ரெய்ன், ரெய்ன்…. என
ஆங்கிலப் பாடல்களை
ஆடவும், பாடவும்
கற்றுத் தந்துவிட்டுப் பின்
கையும் தட்டுகிறோம்,
ஆனால்…. அதன் பின்
இன்றைய குழந்தைகளுக்கு
“எம் மொழி” தமிழ்
தெரியவில்லை என
தலையிலடித்துக் கொள்கிறோம்
தமிழைக் கற்றுத்தர மறக்கிறோம் !
தளிர்
மொக்கும்,
ரோஜாவுடன் சேர்ந்து
ரோந்து செல்கிறது
கையேந்த !
டிராபிக் சிக்னலில்
தாயுடன் பிச்சையெடுக்கும்
தளிர்கள் !
வயது
குழந்தைத் திருமணத்தை
தடுத்திட இயலாத நாம்
திருமண வயது
இன்னும் உயருமா ?
என பேசுகிறோம் !
அட……
மைதானம்
முழுவதும்,
வால் நட்சத்திரங்கள்
விளையாடுகிறதே !
இடம்…… வானமல்ல !
பாலர் பள்ளி !
விஷம்
பொக்கிஷமானப்
பெண் குழந்தையின்
பிறப்பிலே, நாம்
வார்த்தையால்
விஷமேற்றுகிறோம் !
“பொட்டை
பொறந்துடுச்சு” என
கிளை
ஆறு, ஓரிடத்தில்
இரு கிளைகளாக
பிரிந்து ஓடும்போது, எந்தப்
பக்கம் திரும்புவதென
நீருக்கு தெரியாது,
பாவம்……
விவாகரத்தான,
பெற்றவர்களுக்குப் பிறந்த
பிள்ளைகள் !
விடை
விளையாட்டுப் பொருட்களும்
வேடிக்கை நாட்களும்,
விடை கொடுக்காமல்
விடாது அழுதன……
ஆம்,
அன்று பள்ளி திறப்பதால்
அரும்புகள் வீட்டிலில்லை !
ஏமாற்றம்
சாமியைத் தூங்க
செய்து விட்டு
பல்லக்கு மட்டும்
பவனி வருகிறது….
ஆம் ! அப்பாக்கள்
குழந்தையை
ஏமாற்றிவிட்டு
வெளியே வரும்
வேளைகள் !