சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம் 2026- 27ம் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இது விண்வெளித்துறையில் மேலும் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனது முதல் ராக்கெட் ஏவுதலுடன் செயல்பாட்டிற்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள புதிய ஏவுதளம் (எஸ்.எஸ்.எல்.வி ஏவு தளம் / (SSLV) வரும் 2026-27 நிதியாண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுக்கு மிகவும் விருப்பமான ‘சூரிய ஒத்திசைவு துருவ சுற்றுப்பாதைக்கு’ (SSPO) சிறிய செயற்கைக்கோள் ஏவுவாகனங்களை (எஸ்.எஸ்.எல்.வி) அனுப்புவதற்கு குலசேகரப்பட்டினம் தளம் மிகச்சிறந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 2026-27 நிதியாண்டில் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும், 2027-28 முதல் இங்கிருந்து ஏவுதல் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் (TLP)
தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இஸ்ரோவின் ‘அடுத்த தலைமுறை ஏவுவாகனங்களை’ (NGLV) விண்ணில் செலுத்துவதற்காக, மூன்றாவது ஏவுதளம் (Third Launch Pad) அமைப்பதற்கு 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தளம் 2029-30 காலகட்டத்திற்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து முதல் சோதனை ஓட்டம் 2031-32 நிதியாண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27 திட்டமிடப்பட்டுள்ள விண்வெளிப் பயணங்கள்
ஸ்ரீஹரிகோட்டாவின் தற்போதைய ஏவுதளங்களில் இருந்து வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள்:
முதல் ஏவுதளம் (FLP): பி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி மூலம் தலா 3 புவி கண்காணிப்பு திட்டங்கள்.
இரண்டாவது ஏவுதளம் (SLP): தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களுக்காக GSLV மற்றும் LVM3 மூலம் தலா 2 திட்டங்கள்.
தனியார் முதலீடு மற்றும் சீர்திருத்தங்கள்
விண்வெளித் துறையில் 2020-இல் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம், ஏவுதளக் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது. விண்வெளித் துறையில் நேரடி அந்நிய முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வழிகாட்டுதல்களை ‘இன் ஸ்பேஸ்’ (IN-SPACe) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி தனியார் நிறுவனங்கள் விண்வெளி உள்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களைத் தவிர, நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் புதிய ஏவுதளங்களை அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
குலசேகரப்பட்டினம் எஸ்.எஸ்.எல்.வி ஏவுதளம்: 2024-25 நிதியாண்டில் இதற்காக ரூ. 16,270 கோடி (RE) ஒதுக்கப்பட்டது. 2025-26 நிதியாண்டில் (பிப்ரவரி 2026 வரை) ரூ. 148 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஏவுதளம் (TLP): இதற்கான ஆரம்பகட்ட பணிகள் 2025-26 இல் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 2025-26 பட்ஜெட்டில் (BE) ரூ. 2,375 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]