கோட்டை பைரவர், திருமயம், புதுக்கோட்டை

சென்னை காரைக்குடி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் சாலை ஓரத்தில் காட்சி தருபவர் கோட்டை பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கோவிலை காப்பவர் பைரவர். இவருக்குத்தான் இரவு கோவில் நடை சாத்தும்போது இறுதியாக பூஜை செய்து கோவில் நடையை அடைத்து விட்டு செல்வர்.

இரவு முழுவதும் பைரவரின் கட்டுப்பாட்டில்தான் கோவில் இருக்கும் எந்த வித தீங்கும் கோவிலுக்கு நேராமல் இரவு முழுவதும் காப்பவர் பைரவர் என்பது ஐதீகம். பொதுவாக பைரவர் வழிபாடு என்பது சனியினால் ஏற்படும் சங்கடங்களை வெகுவாக குறைக்கும் ஒரு வழிபாடு.

ஏனென்றால் சனி பகவானின் குரு பைரவர். சனியினால் பீடிக்கப்பட்டோர் குருவான பைரவரிடம் சொன்னால் அவர் சனியிடம் சொல்வார் குரு சொல்வதை சிஷ்யன் தட்ட முடியாதல்லவா அதனால் பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபடுகிறார்கள்.

திருமயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும்.

ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதி அவர்களால் இக்கோட்டையானது கட்டப்பட்ட போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டது.

இவர் இந்த கோட்டையை காக்கும் பைரவராக காட்சியளிக்கிறார். சென்னை காரைக்குடி பிரதான சாலையில் திருமயத்தில் சாலையோரத்தில் இந்த பைரவர் காட்சி தருகிறார்.