கூழ் வற்றல்
சிறுகதை
பா. தேவிமயில் குமார்
“லதா, லதா,” என்று சற்று சலிப்புடன் கூப்பிட்டவாறே பூமலை வந்தான்.
கூப்பிடும் குரலை வைத்தே ஏதோ பிரச்சினை என நினைத்துக் கொண்டே சமயலறையில் இருந்து வந்தவள் “என்னங்க” என்றாள்.
“இன்னையோட நாம குடிக்கிற கஞ்சிக்கு வேட்டு வந்திடுச்சி, இருக்கிற சாமானை வைச்சி சமையலை சிக்கனமா செஞ்சிடு, ஹோட்டல், குறிப்பிட்ட நேரம்தான் திறந்திருக்கும், அதுவும் பார்சல் மட்டும் தான், எனக்கு வேலை இல்லை, அப்புறமா மொதலாளி கூப்பிடறேன்னு சொல்லி அனுப்பிட்டாரு”
என்றுக் கூறி கவலையுடன் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். வரும் 10 நாட்கள் இருப்பதை வைத்து சமாளித்து விடலாம், அதற்குப் பிறகு, வாடகை, சிலிண்டர், கேன்தண்ணீர், மளிகை என நினைக்கும் போதே லதாவிற்கு தலை சுற்றியது.
லதாவும், பூமலையும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். லதா பன்னிரெண்டாம் வகுப்பு கூட முடிக்காமல் பூமலையுடன் ஊரை விட்டு ஓடி வந்து விட்டாள். பூமலை சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்கிறான் மாதம் பத்தாயிரம் சம்பளம், “டிப்ஸ்” எனப்படும் அன்பளிப்பு ஒரு நாளைக்கு 200 அல்லது 300 ரூபாய் வரும். இதை வைத்துத்தான் அனைத்து செலவும் செய்ய வேண்டும். பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ இவள் எதுவும் கேட்க முடியாது அந்த அளவிற்கு அங்கு வறுமை விளையாடியது.
எந்த வேலைக்கும் செல்ல லதாவிற்கு பூமலை அனுமதி தரவில்லை பன்னிரெண்டாம் வகுப்பு கூட படித்து முடிக்க வில்லை, ஏன் இந்த காதலின் கால்களைப் பிடித்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்தோமோ என அடிக்கடி நினைப்பாள், வேதனைப்படுவாள்.
குழந்தைகள், ராம், நந்தா இருவரும் அரசுப் பள்ளியில் படிப்பதால் கல்விக்கட்டணத்தில் இருந்து தப்பித்தோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.
“சரிங்க, நான் ஏதாவது வீட்டிலே செய்து விற்கட்டுமா ?”
என்றாள், வேலைக்குப் போக வேண்டாம் என கூறியவன், அதிசயமாய்
“எதையோ செய்” என்றுக் கூறினான்.
இணையதளத்தில் தேடிய போது ‘கூழ் வற்றல்’ எளிதாகப் போடலாம் என பார்த்து விட்டு மாவு அரைத்து விட்டாள் ஆனால் வற்றல் போட அந்த சிறிய சந்தில் இடமில்லை.
குழந்தைகளை கடந்த ஆறு வருடங்களாக பள்ளியில் விட செல்லும் போது வழியில் பங்களா கணக்கில் பெரிய வீடு ஒன்று இருக்கும் அதில் ஒரு வயதான அம்மா, இரண்டு வேலைக்காரர்கள் மட்டும் இருப்பார்கள், வீட்டின் முன் பகுதியில் ஏகாந்தமாய் இடம் இருக்கும், அங்கு வற்றல் போடலாம், ஆனால் எப்படிக்கேட்பது ? என நினைத்தாள்.
சரி கேட்போம் என நினைத்து சென்ற போது அந்த அம்மா, அதிசயமாக, சரி என்று கூறி விட்டார்கள்.
அடுத்த நாள் காலை இவள் செல்வதற்கு முன்பே அந்த அம்மா இரண்டு மடக்கும் கட்டிலை வாசலில் போட்டு இவளுக்காகக் காத்திருந்தார்கள்.
“வாம்மா,” என்று சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுத்து விட்டு, இவளுடன் சேர்ந்து அந்த அம்மாவும் வடகம் பிழிந்து தந்தார்கள்.
“உன் பெயர் என்னம்மா ?” என ஆரம்பித்து குடும்பம், குழந்தைகளை விசாரித்தார்.
பின் தன் பெயர் வைரமாலை என்றும், தான் தன் கணவருடன் சென்னைக்குக் குடி வந்து அறுபது வருடங்கள் ஆகிறது என்றும், தன் கணவர் பெரிய அரசு அலுவலராய் இருந்தாரென்றும் கூறினார்.
பின்பொரு நாள் தன் மகன், மகள் இருவரும் ஐரோப்பாவில் குடும்பத்துடன் தங்கி விட்டதாகவும், இனி இங்கு வந்து தங்க வாய்ப்பில்லை என சந்தோஷம் கலந்த விரக்தியுடன் கூறினார்கள்.
மற்றொரு நாள் அவளிடம் எப்படி சிக்கனமாக இருப்பது, பதப்படுத்தப்பட்ட (பாக்கெட் பொருட்கள்) உணவுகளை வாங்காமல் ஜாம், பொடி, மசாலாத்தூள் எல்லாம் எப்படி செய்வது எனக் கற்றுக்கொடுத்தார்.
இப்படியேப் பல நாள் பலவிதமாக இருவரும் பேசுவார்கள், இவளுடைய குழந்தைகள் விளையாடு வதைப் பார்த்து என் பேரப்பிள்ளைகளும் இங்கிருந்தால் இப்படிதானே என் வீட்டில் வியாடுவார்கள் என கவலையுடன் பேசுவார்கள்.
அந்த அம்மாவிற்கு இவளும் தனக்குத் தெரிந்த கிராமத்துப் பலகாரங்களான பொரி உப்புமா, கிழங்கு தோசை, இனிப்பு குழிப்பணியாரம் என எடுத்து செல்வாள், அந்த அம்மாவின் வசதிக்கு அவள் தரும் உணவைத் தொட மாட்டார்கள் என நினைத்தாள், ஆனால் ஒரு மகள் சமைத்துக் கொடுத்தால் எப்படி ஒரு அம்மா சாப்பிடுவார்களோ அது போல ஆனந்தத்துடன் சாப்பிட்டார் வைரமாலை அம்மாள்.
ஒரு நாள் இவள் வடகம் போட்டதை அரை கிலோ அளவிற்கு தயார் செய்து விற்க ஆரம்பித்தாள். அரை கிலோ நூறு ரூபாய் என்றாலும், பெரிய குடியிருப்புகளில் இருந்தவர்கள் தயங்காமல் வாங்கிக்கொண்டதைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.
உடனே இட்லிப் பொடி, எள்ளுப்பொடி, பருப்புப்பொடி, நெல்லி, மா, இஞ்சி ஊறுகாயும் சிறிய அளவில் வைரமாலை அம்மாவின் அறிவுறுத்தலில் போட்டு விற்றாள், ருசியாக இருந்ததால் உடனே விற்றுத் தீர்ந்தது. விற்பதில் பூமலை கூடவந்து உதவினான்.
லதா, வடகம் விற்ற பணம் அடுத்த இரண்டு மாசத்துக்குப் போதும், என்னையும் முதலாளி இரண்டு நாள் கழித்து வரச் சொல்லியிருக்கிறார், அதற்கு முன்பாக பக்கத்து வீட்டில் புடவை விக்கிறாங்க இல்லையா, அவங்ககிட்டப் போய் வைரமாலை அம்மாவுக்கு ஆயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்து வந்து விடு, அம்மாவைக் காலையில் சென்று பார்க்கலாம் என்றான் பூமலை.
ஆசை, ஆசையாக அந்த அம்மாவிற்கு பிடித்த நிறமான மஞ்சள் நிறத்தில் பருத்திப் புடவை எடுத்துக் கொண்டு, அந்தம்மாவைப் பார்க்கச் சென்ற போது அந்த வீடு வித்தியாசமாய், ஒரு சில உறவினர்கள், ரோசாப்பூ மாலை, ஊதுபத்தி வாசம், மெலிதான அழுகுரல் என இருந்தது, அப்போதே லதா புரிந்து கொண்டாள்.
ஓரிரு மாதங்கள் பழகியது, ஒரு தாய்க்குரிய அன்பினை வாரி வழங்கியது என வாழ்ந்த வைரமாலை அம்மா இறந்து விட்டார் என்று.
“நேற்றிரவு மாரடைப்பால் இறந்து விட்டார்” என வேலைக்காரப் பெண்மணி அழுதபடியே கூறினாள். வாங்கி வந்திருந்த அந்த அம்மாவிற்குப் பிடித்தமான மஞ்சள் நிறப்புடவையை அந்த அம்மாவின் மேல் அழுதுகொண்டே போர்த்தினாள், ஊரடங்கு என்பதால் இருபது பேருக்கு மேல் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. முக்கியமாக ஊரடங்கால் மகனும், மகளும் வரவில்லை என்பது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.
பூமலை, இடுகாடு வரை சென்று வந்தான், அடுத்தடுத்த நாட்கள் லதா மிகவும் சோர்ந்து இருந்தாள்.
பூமலையிடம், லதா, “அன்பாகப் பழக வருடங்கள் தேவையில்லை, சில நாட்கள் போதும் அப்டிங்கறதை வைரமாலை அம்மா எனக்கு உணர வைச்சிட்டாங்க” என்று அழுதாள்.
“அதையே நினைத்துக் கொண்டு இருக்காதே, அந்த அம்மா உனக்கு கற்றுக் கொடுத்ததை செய்தாலே, அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடையும், அமாவாசை கும்பிடும் போது இனி அந்த அம்மாவையும் சேர்த்துக் கும்பிடுவோம்” என சொல்லிவிட்டு வேலைக்குச் சென்று விட்டான்.
2021 ஜனவரி, மெல்ல மெல்ல தொற்று நோயின் தாக்கம் குறைந்தது, ஊரடங்கும் நிறையக் குறைக்கப்பட்டு, சகஜ வாழ்க்கை திரும்பியது. அப்போது வேலையே இல்லையென்றாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது லதாவும் குழந்தைகளும் அந்த பங்களாவீட்டுப் பக்கம் நடை பயிற்சி போல சென்று வருவார்கள், சில சமயங்களில் லதா அந்த கேட் முன்பு நின்றுக் கண் கலங்கி வருவாள்.
2021, ஏப்ரலில் ஒருமுறை அப்படிப்போகும்போது அந்த வீட்டில் இருந்து ஒரு பெண்மணி இவளை “லதா வாம்மா, குழந்தைகளைக் கூட்டிட்டு உள்ளேவா,” என்று அழைத்தார்கள்.
இவள் உள்ளே சென்றது தான் தாமதம், இவளை அந்தப் பெண்மணி கட்டிப் பிடித்துக் கொண்டு ஓ! வென்று அழ ஆரம்பித்து விட்டார்.
“என் இடத்தில் நீ என் அம்மாவிற்கு பணிவிடை செய்ததை நானும் என் தம்பியும் மறக்க மாட்டோம், என் அம்மாவிற்கு நாங்கள் வரவில்லை என்ற ஏக்கமே தெரியாதவாறு பேச்சுத்துணை, உணவு, குழந்தைகள், என அவர்களின் கடைசிக் காலத்தை அழகாக மாற்றி விட்டாய். நாங்கள் கொடுத்து வைக்கவில்லை ஆனால் நீ கொடுத்து வைத்தவள் !
நாங்கள், அம்மாவை கேமரா மூலம் தினமும் கண்காணிப்போம் யார் வருகிறார்கள், வேலைக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிப்போம், நீ வந்தது, அம்மாவிடம் ஆசையாக இருந்தது, அழுதது, அம்மா இறப்பிற்குப் பின் நீயும் உன் குழந்தைகளும் இந்த பங்களாவைப் பார்த்து அழுதது என அனைத்தையும் அறிவோம்” என்று கூறினார்கள்.
“உன் கணவரை போன் போட்டுவரச் சொல்லுங்கள் சகோதரி” என அந்த அம்மாவின் மகள் கூறினார்.
பூமலை வந்ததும், “வாங்க பூமலை அம்மா கடைசியாக, பேசியது என்னத் தெரியுமா ? லதாவிற்கு மிகக்குறைந்த வாடகையில் வீட்டை வாடகைக்கு விடலாம் என்றும், கார் ஷெட்டை உங்களுக்கு டிபன் கடையாகவும் மாற்றித் தரச் சொன்னார்கள்.
நாங்கள் இன்னும் திரும்பி வர மூன்று வருடம் ஆகும், மிகக் குறைந்த வாடகைக்கூட வேண்டாம் அதற்கு பதிலாக வீடு மற்றும் தோட்டத்தைப் பராமரித்துக் கொள்ளுங்கள் எங்கள் அம்மா, இல்லையில்லை லதா வையும் சேர்த்து, நம் அம்மா வாழந்த இல்லம், நன்றாகக் பராமரித்துக் கொண்டு, விலையில்லாமல் மேல் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள், மின்கட்டணம், தண்ணீர்க்கட்டணத்தை நான் இணையத்தில் செலுத்தி விடுகிறேன், வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றுக்கூறி சாக்லேட், பிஸ்கட், குழந்தைகளுக்கு ஆடை எனக்கொடுத்தனர். வைரமாலை அம்மாவின் பேரக்குழந்தைகளோடு லதாவின் குழந்தைகளும் விளையாடினர். அந்த வீடு வைரமாலை அம்மா எதிர்பார்த்தது போல இப்போது இருந்தது.
லதாவும், பூமலையும் என்ன பேசுவது எனத் தெரியாமல் அசந்து விட்டனர், லதா கண் கலங்கிக் கொண்டே “சரிங்கக்கா, சரிங்கண்ணா நான் நம் அம்மாவின் வீட்டை தெய்வீகமாகப் பார்த்துக்கிறேன்” எனக் கைகூப்பி அழுதாள்.
அப்போது உள்ளேத் தொலைக்காட்சியில் ஒரு மன நல நிபுணர் “மனிதன் ஒரு சமூக விலங்கு, ஆரம்பத்தில் அவன் காடு, குகைகளில் வாழ்ந்தபோது சேர்ந்து வாழவே ஆசைப்படுவான், ஆனால் காலம் செல்லச் செல்ல ஏற்றத் தாழ்வுகள் வந்தபோது தனக்குத்தானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதிலிருந்து வெளியே வர மறுக்கிறான்.
ஆனால் உன்மையில் அந்த வட்டத்திற்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம், வெளியிலும்வரலாம் ஆனால் யாரும் வெளியில் வருவதில்லை, அதிலும் நகர்ப்புறத்தில், இன்று இது அதிகம்” என்றார். இதனை அனைவரும் கேட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தனர்.
“நாளைக்காலையே குடி வந்து விடுங்கள்” என்றார்கள். பூமலையும், லதாவும் “சரி” என சொல்லி நன்றி தெரிவித்து விட்டு குழந்தைகளுடன் வந்தனர்.
பூமலையிடம் லதா, “நான் ஆறு வருடத்திற்கு மேலாக அந்த வீட்டையும், அம்மாவையும் பார்ப்பேன், ஆனால் உள்ளே சென்றுப் பேச பயம், தயக்கம் இருந்தது, அப்போதே சென்று இருந்தால், அந்த அம்மா இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.
அந்த டாக்டர் சொன்னது மாதிரி, கிராமம், நகரம் என எல்லாம் ஒன்று தான், மனிதர்கள் சேர்ந்து வாழதான் ஆசைப்படுகிறார்கள் இல்லையாங்க ?” என்றாள்.
“ஆமாம் லதா நகரத்தில் வசிப்பவர்களும் மனிதர்கள் தானே” என்று பேசிய படியே குழந்தைகளுடன் நடந்து சென்றனர்.
பா. தேவிமயில் குமார்