கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகிய பணிகளுக்கு தனியார் நிறுவனத்தை நியமிக்க சிஎம்டிஏ முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்த கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட இந்த புதிய பேருந்து திட்டம் 2018 ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் இன்னும் முழுமைபெறாமல் உள்ளது.

சென்னையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பேருந்து நிலையத்திற்குச் செல்ல தேவையான போதிய போக்குவரத்து கட்டமைப்பு இல்லை.

தவிர, மழை நாட்களில் இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது.

இதனால் பொதுமக்கள் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு வசதியாக வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்திற்கும் இடையே புதிதாக புறநகர் ரயில்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டுள்ளது.

மேலும், அதற்கு தேவையான நிதியையும் ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளதோடு இன்னும் ஓராண்டில் ரயில் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

தவிர, பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீரால் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்க மழைநீர் வடிகால் அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக 25 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பயணிகளின் வசதிக்காகவும் இந்த பேருந்து நிலையத்தை தமிழக அரசு உடனடியாக திறக்கும் என்று சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததாலும் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் கிளம்பாக்கத்தில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போல கிளம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகளை சிஎம்டிஏ வசம் ஒப்படைக்காமல் தனியார் வசம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகன நிறுத்தக் கட்டணம், நுழைவுக் கட்டணம், விளம்பர கட்டணங்கள் தவிர இங்கு அமையவுள்ள 105 கடைகளில் இருந்து வரக்கூடிய பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றைக் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை தனியார் நிறுவனம் பராமரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், எந்த ஒரு கட்டணமும் பொதுமக்களை சிரமப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.