சித்தூர்கர்
சீனா ஊடுருவும் போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நேற்று ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.
கார்கே தனது உரையில்,
”நாட்டை பற்றி பிரதமர் மோடி சிந்திப்பதே இல்லை. அவர் சோனியாகாந்தி குடும்பத்தை வசைபாடுவதில்தான் கவனமாக இருக்கிறார். சோனியாகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பிரதமராகவோ, அமைச்சராகவோ கடந்த 1989-ம் ஆண்டிலிருந்து இருந்தது இல்லை என்றாலும் வாரிசு அரசியல் என்று பேசுகிறார்.
பிரதமர் மோடி மக்களைச் சித்ரவதை செய்து, தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறார். எப்போதும் பொய் பேசும் அவரை ‘பொய்களின் தலைவர்’ என்று சொல்லலாம். மற்ற நாட்களில் உலகம் முழுவதும் சுற்றம் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் செல்கிறார். கலவரம் நடந்த மணிப்பூருக்கு மட்டும் செல்வது இல்லை.
தன்னை ’56 அங்குல மார்பு கொண்டவன். பயப்பட மாட்டேன்’ என்று சொல்லும் மோடிக்குப் பயம் இல்லை என்றால் சீனாவுக்குப் பெரும் நிலப்பரப்பை விட்டுக்கொடுத்தது ஏன்? சீன ராணுவம் ஊடுருவியபோது, மோடி தூங்கிக்கொண்டிருந்தார். அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா? ”
என்று வினா எழுப்பியுள்ளார்.