திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 28-ஆக அதிகரித்துள்ளது  என கேரள மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸை கொண்டு வந்த கேரள மாநிலத்தில் தற்போது ஜிகா வைரஸ் பரவி வருகிறது. கொரோனவே இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலையில்,  கேரள மாநில மக்களை தற்போது ஜிகா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களாக ஜிகா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிகா வைரசானது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுவதாகவும்,  பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும் என்றும், 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜிகா வைரஸ் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படுவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம், குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இநத நிலையில், இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தை சேர்ந்த மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்படடு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது,  திருவனந்தபுரம் ஆனையரா பகுதியை சேர்ந்த 35 மற்றும் 29 வயதான 2 பெண்கள், குன்னுக்குழி பகுதியை சேர்ந்த 38 வயதான பெண், பட்டம் பகுதியை சேர்ந்த 33 வயது ஆண், கிழக்கேகோட்டை பகுதியை சேர்ந்த 44 வயதான பெண் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான அனைவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.