திருவனந்தபுரம்:

தேர்தலுக்குப் பின் வேட்பாளர்கள் ஓய்வு எடுக்கப் போவது வழக்கம். ஆனால், கேரளாவில் வேட்பாளர்கள் சற்று வித்தியாசமாக செயல்படுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.


கேரளாவில் கடந்த செவ்வாய்க் கிழமை வாக்குப் பதிவு முடிந்தது.  இதனையடுத்து, வியாழக்கிழமையிலிருந்து கட்சி போஸ்டரை கிழிப்பதும், சுவர் விளம்பரங்களை அழிப்பதும் என பிஸியாக இருக்கிறார்கள் கேரள வேட்பாளர்கள்.

இடது ஜனநாயக முன்னணியின் எர்ணாகுளம் வேட்பாளர் பி.ராஜீவ், பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

எர்ணாகுளத்தை சுத்தம் செய்வோம் என்ற ஹேஸ்டேக்குடன் சமூக வலைதளங்களில் ராஜீவ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல், எர்ணாகுளம் பாஜக கூட்டணி வேட்பாளர் அல்போன்ஸ் கண்ணன்தனம் பிரச்சாரத்தின் போது தொகுதி முழுவதும் பயன்படுத்திய போஸ்டர், சுவர் விளம்பரங்களை அழித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் மிஜோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், தனக்கு கிடைத்த சால்வை மற்றும் துண்டுகளை சேகரித்து, அதனை பைகளாக மாற்றி உபயோகப் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, தேர்தல் பிரச்சாரத்தின் போது, எனக்கு பரிசாக லட்சத்துக்கும் மேற்பட்ட துணிகள் வந்தன. இதனை பைகளாகவும், தலையணை உறைகளாகவும் மாற்றி வருகிறோம் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாததை பெருமையாக சொல்கிறார்கள் கேரள வேட்பாளர்கள்.