திருவனந்தபுரம்

ரசியல் தலையீட்டால் காவல்துறை முடமாகி உள்ளதாக காவல்துறை உதவி இயக்குனர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் இந்த கட்சியின் போராட்டத்தில் மரணம் அடைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தியாகிகள் தினம் கொண்டாடப் பட்டது.   இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காவல்துறையினர் சங்கத்தினரை மறைந்த கட்சித் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஹாசன் ஆகியோர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.   ரமேஷ் சென்னிதாலா, “அரசு காவல்துறையை அரசியல் மயமாக்குகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது.” எனக் கூறி உள்ளார்.  ஹாசனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

இதை அரசு மறுத்துள்ளது.  இந்நிலையில் கேரள அரசு காவல்துறையின் உதவி இயக்குனர் வினோத் குமார் காவல்துறை இயக்குனர் லோக்நாத்துக்கு ஒரு அறிக்கை அளித்துள்ளார்.   அதில், ”காவல்துறையில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது கண்கூடாக தெரிகிறது.   இதனால் காவல்துறை அபாய நிலையில் உள்ளது.   அரசின் தலையீட்டால் காவல்துறை முடமாகி உள்ளது.

சமீபத்தில் நடந்த தியாகிகள் தினத்தில் காவல்துறை சங்கத்தை சார்ந்தவர்கள் சிவப்பு சட்டை அணிந்து இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.   கட்சிக்காக மறைந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துதல்,  கட்சி சார்பான கோஷங்கள் எழுப்புதல் ஆகியவை நடந்த இந்த நிகழ்வில் காவல்துறை சங்கங்கள் கலந்துக் கொண்டது வருந்தத் தக்கது” என தெரிவித்துள்ளார்.

வினோத் குமாரின் இந்த அறிவிப்பு கேரள அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.