டேராடூன்:

கடும் பனிப் பொழிவு காரணமாக கேதர்நாத் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடங்கியுள்ளது.


தற்போது கேதர்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் லிஞ்சாவுலி மற்றும் பிம்பாலி பகுதிகளில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டுளளனர்.

கேதர்நாத் கோவிலுக்கு நேற்று முன் தினம் சென்ற முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், ராஜ்யசபா எம்பி பிரதீப் தம்தா, எம்எல்ஏ மனோஜ் ராவத் உள்பட 6 காங்கிரஸ் கட்சியினர் அங்கு சிக்கியுள்ளனர். பனிப் பொழிவு காரணமாக அவர்கள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கலெக்டர் மாங்கேஷ் கில்தியால் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு காரணமாக அவர்களை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.