கராச்சி: காஷ்மீர் என்பது அந்தப் பள்ளத்தாக்கின் மக்களுக்குத்தான் எனவும், பாகிஸ்தானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ சொந்தமானதல்ல எனவும் தனது புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி.
மேலும், காஷ்மீரிகளை மையமாக வைத்தே அப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“Game Changer” என பெயரிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தை, ஷாகித் அஃப்ரிடியும், அந்நாட்டுப் பத்திரிகையாளர் வஜஹாத் எஸ்.கான் என்பவரும் சேர்ந்து எழுதியுள்ளார்கள். இப்புத்தகத்தில்தான் காஷ்மீர் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அவர்.
இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்காகவும், கர்தார்பூர் காரிடாரை திறந்ததற்காகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் மக்களுக்காக நிறைய நன்மைகளை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால், இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுமே வளம்பெறும் எனக் கூறியுள்ள அவர், காஷ்மீர் எல்லையைப் பாதுகாப்பதிலேயே இருநாடுகளும் அதிகம் செலவு செய்கின்றன என்றார்.
காஷ்மீர் பிரச்சினையை காஷ்மீரிகளை மையமாக வைத்தே தீர்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.