தேநீர் கவிதைகள் – 2

கருப்புத் தேனீர்

பா. தேவிமயில் குமார்

நிறமற்ற நிறத்தின் தூதுவர் நானே
தூற்றுவதேன் கருப்பென?

வானவில்லின் வண்ணங்களுக்குள் கருப்பும் சேர்ந்திருந்தால்
கலக்கலாக இருந்திருக்குமோ?

பார்க்கும்போதே
யப்பா,,,, எம்மாம் கருப்பு என்பதேன்?

காக்கா ,
கருவண்டு ,
கருப்பட்டி,
கருப்பு தேநீர்,
கரிச்சட்டி ,
என ‘க’ வரிசை பெயர்களை படைப்பது ஏன்?

ஆணா ? பெண்ணா ? என்ற கேள்விக்கு பின்….
கருப்பா ? சிவப்பா ? என களம் விரிகிறது
பிறந்த நாளில் இருந்தே ……
நிறத்தின் தாக்கம்

காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறுவதில்லை …..
நிறம் பற்றிய நெருடல் பேச்சுக்களால் ……

சிகப்பழகு விளம்பரமும்,
சினிமா வசனங்களும்
சிதைத்து விட்டன
எங்கள் நிறங்களின்
அழகை!

என் நிறம் என்பது என் கவுரவம் !!!!
என்னை நேசிக்க இந்த நிறம் தடையாக இருக்குமானால், அதைத்தாண்டி….
அதை மாற்றிட…..
நான் எதுவும் செய்யப் போவதில்லை!!!!

மாறாக இன்னும்
என்னையும்
என் நிறத்தையும்,

நான் அதிகமாக நேசிக்க ….

மிக அதிகமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன்!!!

என்னை நானே நேசிக்க வில்லை என்றால் வேறு யார் நேசிப்பார்கள்???

இப்படிக்கு கம்பீரமான கருப்பழகு பெண்