பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக விஷ்வேஸ்வர் ஹெக்டே காகெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த உறுப்பினர் போபையா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, விஷ்வேஸ்வர் ஹெக்டே காகெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சபாநாயகராக பொறுப்பேற்றார்.
கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா மீண்டும் பதவி ஏற்று, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்ததும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தீவிரம் காட்டி வந்தது.
பாஜக மூத்த உறுப்பினரான கே.ஜி.போபையாவை சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்ப தாக தகவல்கள் வெளியான நிலையில், கர்நாடக சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பாஜக எம்.எல்.ஏ. விஷ்வேஸ்வர் ஹெக்டே நேற்று முதல்வர் எடியூரப்பாவுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் போபையா சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்டது.
இந்த நிலையில், சபாநாயகர் தேர்வுக்கு வேறு யாரும் போட்டியிடாத நிலையில், விஷ்வேஸ்வர் ஹெக்டே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று சபாநாயகராக பதவி ஏற்றார். அவருக்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சித்தராமையா உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.