பெங்களூரு:

ர்நாடக முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் உள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில், உத்தரகன்னடா காங்கிரஸ் தலைவர் வீட்டில் கடந்த 2ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் உள்ள சொகுசு விடுதிகளில் சோதனை நடத்தி வருகிறது.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.152 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் சித்தராமையா போட்டியிடும்  பதாமி தொகுதியில் உள்ள  கிருஷ்ணா ஹெரிடேஜ் என்ற ரிசார்ட்டில்  வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவுமுதல் இந்த சோதனை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுரங்க தொழில் அதிபர் ஆனந்த்சிங்கிற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்த விடுதியில் தான் முதலமைச்சர் சித்தராமையா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கி இருந்துள்ளார். விடுதியில் நடத்தப்பட்ட 9 மணி நேர சோதனைக்கு பிறகு 11 லட்சம் ரூபாய் மதிப்பாலன பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ரெய்டு நடைபெறும் சொகுசு விடுதி

கர்நாடக முதலவர்  சித்தராமையா போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்று பதாமி என்பது குறிப்பிடத்தக்கது.