பெங்களூரு:

4 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 24ம் தேதி காலை 11 மணிக்கு கர்நாடகா பாஜக.வில் தடபுடலாக இணைந்தவர் பிரமோத் முத்தலிக். ஆனால், அதே நாள் மாலை 4 மணிக்கு அவரை கட்சியில் சேர்க்கும் முடிவு திரும்ப பெறப்பட்டது.

இது குறித்து அப்போது அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 10 சதவீத ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து கொண்டனர். கொலையாளிகள், குற்றவாளிகள் கட்சியில் உள்ளனர். நான் பாலியல் வழக்கிலோ அல்லது கொலை வழக்கிலோ சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான காலத்தை கழித்துவிட்ட எஸ்.எம். கிருஷ்ணாவை கட்சியில் சேர்த்துள்ளனர்’’ என்று பரபரப்பாக குற்றம்சாட்டினார்.

தற்போது 55 வயதாகும் இவர் ஸ்ரீ ராம் சேனா என்ற இந்துத்வா அமைப்பை செயல்படுத்தி வருகிறார். கர்நாடகாவில் இவருக்கு  5 லட்சம் ஆதரவாளர்கள் உள்ளனர். இது தவிர 11 மாநிலங்களில் இவருக்கு செல்வாக்கு உள்ளது. மே 12ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இவரது அமைப்பு சார்பில் 40 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் சிவசேனா கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் அல்லது பாஜக தோல்வி அடைய வேண்டும் என்பது எனது எண்ணம் கிடையாது. சிவ சேனா வெற்றி பெற வேண்டும். பாஜக இந்துத்வாவை தவறாக பயன்படுத்துகிறது. அதனால் நாங்கள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் பெயரில் பாஜக ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தான் உள்ளது. இந்து வாக்காளர்கள் அவர்களை தற்போது உணர செய்திருப்பதால் தான் காங்கிரஸ் கட்சியினர் கோவில்களுக்கு செல்கின்றனர்.

பாஜக.வினர் என்னை வேண்டாம் என்றதால் உணர்ச்சிவசப்பட்டேன். என்னை அவர்கள் மதிக்கவில்லை. தற்போது அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டது. கொள்கை இல்லாத ஊழல் கட்சியாக பாஜக உள்ளது. தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பாஜக.வை ஆதரிக்கமாட்டோம்’’ என்றார்.

தற்போது இவர் பாஜக.வின் போலி இந்துத்வா கொள்கை குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதோடு கர்நாடகாவில் செல்வாக்கு இல்லாத சிவசேனா இவர் மூலம் மாநிலத்தில் கால் ஊன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.