டெல்லி: கன்வாரியா யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு உரிமையாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,  உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள், பணியாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என  கட்டாயப்படுத்தக் கூடாது, அரசின் இந்த உத்தரவு பாரசட்சமானது  என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட்,  மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.

இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளார். கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கன்வர் யாத்திரை ஜூலை 22-ம் தேதி தொடங்க உள்ளதால் உத்தரபிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து உத்தரகாண்ட்,  ம.பி. மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். யோகியின் உத்தரவு  “மத நல்லிணக்கத்துக்கு இத்தகைய உத்தரவு கேடு விளைவிக்கும். மாநிலத்தின் இணக்கமான சூழலை கெடுக்கும்” என கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

இந்த சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அவரது மனுவில்,  இந்த உத்தரவுகள் வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்துவதாகவும், முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு சமூக ரீதியாக அமல்படுத்தப்பட்ட பொருளாதாரப் புறக்கணிப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் வாதிட்டு, இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்க மனு கோரியது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கன்வாரியா யாத்திரையில் உணவகங்கள் கேட்கும் அரசுகளின் உத்தரவு குறித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. “கன்வாரியாக்களுக்கு சைவ உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால், இந்த உத்தரவு நம் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்று வாதிடப்படுகிறது. உத்தரவுகள் பாரபட்சமானவை என்பது ஒரு வாதமாகும்,” என்று நீதிபதி ராய் லைவ் லாவால் மேற்கோள் காட்டினார்.

இதையடுத்து,  உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள், பணியாளர்களின் பெயர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது மனுக்கள் மீது உரிமையாளர்களின் பெயர்களை பதிவு செய்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அவர்களின் பதிலைக் கேட்டு ஜூலை 26-ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு  எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.