டில்லி

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறித்து மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், செல்லமேஸ்வரர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்கள்.   அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கிய வழக்குகளைப் பகிர்வதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து அவர்கள் தீபக் மிஸ்ராவுக்கு ஒரு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்கள்.  அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் தேர்வு செய்யும் நிலையில் இருந்த போது அவர் இவ்வாறு நடந்தது சக நீதிபதிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.   இந்த செய்தியாளர் சந்திப்பு அரசுக்கும் தலைமை நீதிபதியின் அலுவலகத்துக்கும் உள்ள உறவு குறித்து கேள்விகளை எழுப்பியது.

அதன் பிறகு தலைமை நீதிபதி பதவி ஏற்ற ரஞ்சன் கோகாய் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.   அவருக்கு நேற்று மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி  ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்து அவருடைய முன்னாள் சக நீதிபதியும் அவருடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றவருமான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் கருத்து தெரிவித்துள்ளார்.

மதன் லோகுர், “ஏற்கனவே கடந்த சில தினங்களாக நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ஏதேனும் பதவி அளித்து கவுரவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.  எனவே இது ஆச்சரியமானது அல்ல ஆனால் இவ்வளவு விரைவாக அவருக்குப் பதவி அளித்தது ஆச்சரியமாக உள்ளது.   அவர் முன்பு கூறிய நீதிமன்ற சுதந்திரம், நடுநிலைமை, மற்றும் நீதியின் பெருமை ஆகியவை என்ன என்பது இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது.  இது ஒரு இடிந்து விழுந்த கோட்டையா?” எனக் கூறி உள்ளார்.

ரஞ்சன் கோகாய் உடன் கவுகாத்தி உயர்நீதிமன்ற காலத்தில் இருந்து உடன் பணிபுரிந்த செல்லமேஸ்வர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார். அவரிடம் இது குறித்துக் கேட்ட போது கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.   ஆயினும் முன்பு ஒரு முறை செல்லமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் பணி ஓய்வுக்குப் பிறகு எந்த ஒரு அரசுப் பதவியையும் ஏற்க மாட்டோம் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

[youtube-feed feed=1]