டெல்லி:   ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக ஆண்டுதோறும்  அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மறைந்த முன்னாள் பரிதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது,  எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1975 ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.  அந்த நாளை நினைவுகூரும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ் – ‘Samvidhaan Hatya Diwas’) அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம்  எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு,  அஞ்சலி செலுத்தப்படும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து கூறியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய கோடிக்கணக்கான மக்களை கவுரவிப்பதே  மோடி அரசின் நோக்கம் என்றும் அந்த நேரத்தில், அப்போதைய அரசாங்கம் அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, நாட்டின் மக்கள் மீது அதிகப்படியான மற்றும் அட்டூழியங்களைச் செய்தது.” எமர்ஜென்சி காலத்தில் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஜூன் 25 ஆம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’  அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால்,  அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட போது,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தும்  வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜென்சி காலம்:

அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதை மீறி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலையை நாடு முழுவதும் அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான 21 மாத காலப்பகுதியாக இந்தியாவில் எமர்ஜென்சி இருந்தது , அப்போது பிரதமர் இந்திரா காந்தி நாட்டிற்கு உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்தார் .  நடைமுறையில் உள்ள “உள் குழப்பம்” காரணமாக அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது அவசர நிலை பிரகடனத்தை  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் .

அவசரநிலையை விதிப்பதற்கான இறுதி முடிவு இந்திரா காந்தியால் முன்மொழியப்பட்டது, இந்திய ஜனாதிபதியால் ஒப்புக்கொள்ளப்பட்டது , மற்றும் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தால் ஜூலை முதல் ஆகஸ்ட் 1975 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது உடனடி உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் உள்ளன என்ற பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.  அதன்படி, இந்த அவசரநிலை 25 ஜூன் 1975 முதல் அமலில் இருந்தது மற்றும் 21 மார்ச் 1977 அன்று முடிவடைந்தது.

இந்த உத்தரவு ஆணைப்படி ஆட்சி செய்யும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கியது.  தேர்தல்களை ரத்து செய்ய அனுமதிப்பது மற்றும் குடிமக்கள் உரிமைகளை நிறுத்தி வைப்பது. இந்த காலக்கட்டத்தில் எதிர்க்கட்சியினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்திராக காந்தியின்  அரசியல் எதிரிகளில் பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. இந்த நேரத்தில், வாஸெக்டமிக்கான வெகுஜன பிரச்சாரத்தை அவரது மகன் சஞ்சய் காந்தி வழிநடத்தினார். இதனால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்திரா காந்தியின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளால்,  பெருந்தலைவர் காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இத்தகைய நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே ஆண்டு அக்டோபர் 2ல் பெருந்தலைவர் மரணமடைந்தார்.

அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, இந்த நெருக்கடி நிலையை எதிர்த்தது. இதற்காக கடற்கரையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக 1976ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்தது.
அன்றிரவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர். (தி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினரும் கைது செய்யப்பட்டனர்) பிப்ரவரி 1ந் தேதி கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் படை, மு.க.ஸ்டாலினை கைது செய்தது. திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் மனைவி கண்கலங்கி நிற்க, ‘மாமியார் வீட்டு’க்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டார். ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, நீலநாராயணன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தி.க. தலைவர் கி.வீரமணியும் அதே சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். வைகோ உள்ளிட்ட தி.மு.கவினர் பலரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில்  காவலர்கள் தடியுடன் சென்று மிசா சிறைவாசிகளைக் கடுமையாகத் தாக்கினர். மு.க.ஸ்டாலின் மீதுதான் கொலைவெறியுடன் தாக்குதல் நடந்தது. அவரைப் பாதுகாப்பதற்காக குறுக்கிட்ட சிட்டிபாபு கடுமையான தாக்குதலுக்குள்ளாகி பின்னர் மரணமடைந்தார். தாக்குதலில் ஆற்காடு வீராசாமியின் காது திறனிழந்தது. முரசொலி மாறனின் முதுகுப்பகுதியில் கடுமையான தாக்குதல். கி.வீரமணியையும் பலமாகத் தாக்கினர். இவர்களைப் போலவே மதுரை சிறையில் தாக்குதலுக்குள்ளான தி.மு.க பிரமுகர் சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணமடைந்தார்.