100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடித்து வருகிறது.
திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 7) மாலை தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்ய நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தனது ட்விட்டர் பதிவில்
#Tamilfilmindustry will glow bcs of this disaster situation நடிகர், நடிகைகள்,இயக்குனர்கள், முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் 50% சம்பளத்தை குறைக்க முடிவு lots of top hero’s director’s spoke with me & said they all r happily willingly going to support producers this is called unity
— JSK Satishkumar (@JSKfilmcorp) July 7, 2020
“இந்தப் பேரழிவு சூழலால் தமிழ் சினிமா துறை பிரகாசிக்கப் போகிறது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களின் 50% சம்பளத்தைக் குறைக்க முடிவு. ஏராளமான உச்ச நடிகர்கள் என்னிடம் பேசினார்கள். தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியுடன் மனமுவந்து ஆதரிக்கப்போவதாக என்னிடம் தெரிவித்தனர். இதற்குப் பெயர்தான் ஒற்றுமை”.
இவ்வாறு ஜே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.