சென்னை: பத்திரிகையாளர் குடும்ப நிதியுதவி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் நடைபெற்ற பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தின்போது பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக ரூ.25.000, ரூ.40,000 ரூ.50,000,ரூ.2,00.000 என வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்பொழுது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப ரூபாய் மூன்று இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே, அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர் செய்தித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.5,00,000 வழங்கப்படும்.
15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ3.75000, 10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ.2.50.000, 5 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ.1,25,000 என்று நடைமுறையிலுள்ள விதிகளின்படி, குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.