வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் இழுபறி நிலவி வந்த நிலையில், முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவை ஜோ பைடன் வென்றுவிட்டதாகவும், இதன்மூலம் அவர் அடுத்த அதிபராக தேர்வுசெய்யப்படவுள்ளதாகவும் Decision Dest HQ என்ற மீடியா அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பென்சில்வேனியா மாகாணத்தில் மொத்தம் 20 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதனை வென்றால், ஜோ பைடன் அதிபராவதற்கு தேவையான 270 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டுவார்.
இதன்மூலம், அமெரிக்காவின் 46வது குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார். அதேசமயம், வாக்கு எண்ணிக்கையில், அதிபராவதற்கு தேவையான எண்ணிக்கையை ஜோ பைடன் பெற்றுவிட்டாரா? என்ற உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், Decision Dest HQ என்ற ஊடக அமைப்பு, பென்சில்வேனியா மாகாணத்தை, ஜோ பைடன் கைப்பற்றிவிட்டார் எனவும், அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்றும் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.