டெல்லி: ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி குண்டர்கள் திட்டமிட்டு ஜேஎன்யூவில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று அப்பல்கலைக்கழக மாணவர் தலைவர் அய்ஷே கோஷ் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதியில் புகுந்த 100க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த நபர்கள்  மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதலில் பெண்களும் ஈடுபட்டிருந்தது ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் தெரிய வந்தது.

இந்நிலையில், தாக்குதல் குறித்து ஜேஎன்யூ மாணவர் சங்கத்தலைவர் அய்ஷே கோஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விடுதியில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதல் திட்டமிட்ட ஒன்று.

சபர்மதி விடுதியில் போராடத்தயாராக இருந்தபோதுதான் தாக்குதல் அரங்கேறி இருக்கிறது. இதுபோன்ற கண்மூடித்தனமான தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தாக்குதல் நடத்த வந்தவர்களை அங்கிருந்த காவலாளிகள் தடுக்கவில்லை. காவலாளிகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் முன்னரே தொடர்பு இருந்திருக்கிறது. அவர்கள் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர்.

என் மீது இரும்பு ராடுகளை கொண்டு தாக்கினர். என்னை சுற்றி 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கினர். எங்களை அசிங்கமாக பேசிக் கொண்டு தாக்குதலில் இறங்கினர்.

ஜேஎன்யூவில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை. கடந்த 4 அல்லது 5 நாட்களாகவே ஆர்எஸ்எஸ் அபிமானம் கொண்ட பேராசிரியர்கள் மாணவர்களை உசுப்பேற்றி உள்ளனர். எனவே, பல்கலைக்கழக துணைவேந்தர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

[youtube-feed feed=1]