மதுரை:

திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு, தனி அணியாக செயல்பட்டு வரும் டிடிவி தினகரன், அடுத்த ஜெ.பிறந்த நாளுக்குள் ஆட்சி அமைக்க உறுதி ஏற்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் அடுத்த பிறந்த நாளில் அரசு அமைக்க உறுதியேற்குமாறும், அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா என டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெரியாரின் போர்க்குணமும், அண்ணாவின் அறிவுச் செல்வமும் எம்.ஜி.ஆரின் வள்ளல் குணமும் ஒருசேர வந்தவர் ஜெயலலிதா‘, எதிர்ப்புகள், அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஜெயலலிதா வென்று காட்டிய பாங்கை இதயத்தில் நிலைநிறுத்துவோம் என்று கூறி உள்ளார்.

மேலும், மக்களும் தொண்டர்களும் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் ஆர்.கே.நகர் வெற்றி என்றும் கூறியுள்ள அவர், ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளில் அவர் நிறுவிக்காட்டிய மக்கள் அரசை அமைக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அடுத்த பிறந்த நாளுக்குள் தலை நிமிர்ந்த தமிழகத்தை அமைத்து காட்டுவோம் என்றும் கூறி உள்ளார்.

அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அஞ்சாத சிங்கமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா  என்றும், துரோகிகளிடம் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் இருக்க வேண்டும் என்பதே டில்லியின் விருப்பம் என்று குற்றம் சாட்டியுள்ள  டி.டி.வி.தினகரன்,  தலை நிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற ஜெயலலிதாவின் கொள்கையை உறுதி செய்வோம்.