சென்னை: “செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என 9 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்வர் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழி போட்டுள்ளார். இது இணையதளஙகளில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
“ஒப்பந்த செவிலியர்கள் என்ற முறையே 2014 – 15 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நிரந்தர பணியிடங்கள்தான். தற்போதைய செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்வினைகள் ஆற்றப்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை எந்தவொரு முடிவையும் சரியாக எடுக்காமல், செவிலியர்கள் போராட்டத்திற்கான காரணத்தை கண்டறிந்து, அதை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, முன்னாள் முதல்வர்மீது பழிபோட்டு, தப்பிக்க நினைக்கிறது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிராப்ளத்தை சால்வ் பண்ண முடியவில்லை என்றால், ஏன் பதவியில் இருக்கிறீர்கள், உடனே ராஜினாமா செய்யுங்கள் என்றும் பலர் காட்டமாக கூறி வருகின்றனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், “ செவிலியர்களை புறக்கணிக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. இப்போது போராட்டம் நடத்தும் செவிலியர்கள் புதிதாக வேலைக்கு வந்தவர்கள் அல்ல. 7,8 ஆண்டுகளாகவே பணியாற்றி வருபவர்கள்.
இவர்களின் பணி நியமன ஆணையில், ஒப்பந்தப் பணியாளர்களாகவே வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அந்த பணி நியமன ஆணையிலேயே 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் உருவாவதை பொறுத்து பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் அரசு பொறுப்பேற்ற பின்னர், 2021-ல் 251 காலிப்பணியிடங்களும், 2022-ல் 678 காலிப்பணியிடங்களும், 2023-ல் 489 காலிப்பணியிடங்களும், 2024-ல் 1694 காலிப்பணியிடங்கள், 2025-ல் 502 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இப்போது 169 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளது. அதற்கான நேர்முகத்தேர்வு முடிந்துவிட்டது. இதுவரை எங்கள் அரசு 3783 காலிப்பணியிடங்களை நிரப்பியுள்ளோம்.
இப்போது செவிலியர் காலிப்பணியிடங்களே இல்லை. காலிப்பணியிடங்கள் உருவானால் மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு வேலை வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் இருந்து வேலை வழங்கவில்லை என்றால், எங்கள் மீது குறை சொல்லலாம். காலிப்பணியிடங்கள் உருவானால் பணி மூப்பின்படி ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். கரோனா காலத்தில் பணி செய்த 714 பேருக்கும் ஒப்பந்த செவிலியர் பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தோம். அதன் அடிப்படையில்தான் 3783 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கினோம். மீதமுள்ளவர்களும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
ஒப்பந்த செவிலியர்கள் என்ற முறையே 2014-15 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நிரந்தர பணியிடங்கள்தான். தற்போதைய செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான். இப்போது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்கள். இந்தப் பிரச்சினையை உருவாக்கியதே அவர்கள்தான். 2014-15 ஒப்பந்த செவிலியர்கள் நியமனத்தை உருவாக்கியது, 2019 -20 கரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களை கூடுதல் படுத்தியதும் அவர்கள்தான். அப்போது கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும், பணி நிரந்தரம் செய்யவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னும் 8322 பேர் ஒப்பந்த செவிலியர்களாக உள்ளனர். அவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள். புதிய காலிப்பணியிடங்களை நாம் உருவாக்க முடியாது. செவிலியர்கள் போராடுவது அவர்களின் உரிமை. ஆனால், வேலை நேரத்தை வீணடிக்காமல், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்
[youtube-feed feed=1]