டெல்லி: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை 11 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருவது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.

90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவில்  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது பா.ஜ.க. முன்னேறுகிறது.

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும் பா.ஜ.க. 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஹரியானாவில் சில தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ.க. மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும், பாஜக 27  இடங்களிலும், பிடிபி கட்சி 5 இடங்களிலும்,  முன்னிலை வகித்து வருகிறது. .ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு (ஜே.கே.என்) போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, கந்தர்பால் மற்றும் புட்காம் தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறார்.