டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காலை 9மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி முன்னணியில் உள்ளது.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 49 -இல் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக – 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜுலானா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல ஜம்மு & காஷ்மீரில் தற்போதைய நிலவரப்படி, 40-இல் காங்கிரஸ் முன்னிலை, 29 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது
ஹரியானா & ஜம்மு&காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேநேரம் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு, கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளதாக குறிப்பிடுகின்றன. அதேநேரம், ஜம்மு &காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.
கடந்த 2014ல் நடந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில், எக்ஸிட் போல் கணிப்புகள் உண்மையான முடிவுகளுக்கு அருகில் இருந்தன. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பிடிபி 32-38 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றும், 44 இடங்கள் என்ற மேஜிக் குறியைத் தாண்டும் என்றும், பிஜேபி 27-33 என்ற இடத்தைப் பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. தேசிய மாநாட்டு கட்சிக்கு 8-14 இடங்களும், காங்கிரசுக்கு 4-10 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டது. துல்லியம் நெருக்கமாக இருந்தது. இறுதியாக, பிடிபி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், என்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் 2024 சட்டமன்றத் தேர்தலில் NC மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகின்றன, அதே நேரத்தில் BJP மற்றும் PDP ஆகியவை ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிடுகினறன.