ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், கந்தர்பால் தொகுதியில் முன்னாள் மாநில முதல்வர் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ந்தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ந்தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ந்தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி, அங்குள்ள பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அதன்படி காங்கிரஸ் 33 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 52 இடங்களிலும், ஐந்து தொகுதிகளில் “நட்பு கட்சிகளும் ” போட்டியிடுகிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. மேலும் சில இடங்கள் உள்ளூர் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் நாளையுடன் (ஆக.28) நிறைவடையும் நிலையில் ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி இன்று (ஆக. 27) வெளியிட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நேற்று (ஆக. 26) நிறைவு பெற்றது. அதன்படி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன. மேலும் பாஜக சார்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கந்தர்பால் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும், ஜாதிபாலை தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தன்வீர் சாதிக்கும் போட்டியிடுகின்றனர்.