மதுரை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டி உள்ளது. இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றன. வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய்ந்து காளையர்களை மிரட்டிச் செல்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் 848 காளைகள் கலந்து கொள்கின்றன. இன்றைய போட்டியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படும் வீரருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட வுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி, கடும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 476 காளைகளும், அதனை அடக்குவதற்காக 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்காக 800 காளையர்கள் களமிறங்க பதிவு செய்துள்ளனர்.
காளையர்களின் கைகளில் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் மாருதி ஆம்னி வேன், இருசக்கர வாகனம், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பட்டுப்புடவைகள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்படு கின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ள நிலையில், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.