டெல்லி: ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம், ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும் என ராமர்கோவில் நில விவகாரத்தில் வழக்கு தொடுத்த இஸ்லாமியர்  இக்பால் அன்சாரி தெரிவித்து உள்ளார்.

கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  பாபர் மசூதி இடிக்கப்பட்டுள்ள இடம் ராமர்கோவில் அமைந்த இடம் என்றும், இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது அந்த கோவில் இடிக்கப்பட்டு அதன்மேல் ராமர்கோவில் கட்டப்பட்டது என தொல்லியல்துறை உறுதி செய்தது. இதனால் இடிக்கப்பட்ட  இடத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதிக்க கோரி ஹிந்துக்கள் தரப்பிலும், கோயிலைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமியா்கள் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த ராமஜென்ம பூமி-பாபா் மசூதி வழக்கில் இஸ்லாமியா்கள் தரப்பின் முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி . இதுதொடர்பாக ராமஜென்ம பூமி வழக்கும் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு  கடந்த 2019-ஆம்  வழங்கப்பட்டது. தீர்ப்பில், சா்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும்,  அந்த பகுதியில் அறக்கட்டளை அமைத்து ராமா் கோயிலைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இஸ்லாமியா்கள் மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கித் தரவும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அயோத்தியில் கட்டப்பட்டு வந்த பிரமாண்டமான  ராமா் கோயில் தரைத்தளப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதைத் தொடா்ந்து, கோயில் கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை, பிரதமா் மோடி முன்னிலையில் சிறப்புச் சடங்குகள் நடத்தி,  ஜனவரி 22ந்தேதி (திங்கள்கிழமை) பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இஸ்லாமியர்கள் உள்பட முக்கிய நபர்கள் 10ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி,  ராமஜென்ம பூமி-பாபா் மசூதி வழக்கில் இஸ்லாமியா்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று அவரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இக்பால் அன்சாரி, அயோத்தி பொதுக்கூட்டத்தில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறியதைப் போல், சிறிய பிரச்னைகளுக்காக சண்டையிட்டுக் கொள்ளாமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவமாக இருந்தது. ராமா் தற்போது அயோத்திக்கு வரவில்லை.

கடந்த 1949-ஆம் ஆண்டே அயோத்திக்கு அவா் வந்துவிட்டாா். அப்போது மசூதிக்குள் மா்மமான முறையில் சிலை வைத்ததோடு பாபா் மசூதியை இடித்து, ராமா் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதுவரை அனைத்துக்கும் காங்கிரஸே காரணம் என்று எனது தந்தை அவ்வப்போது கூறுவாா்.

ஆனால், பாஜக ஆட்சியில் ராமா் கோயில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேறு எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறவில்லை. உண்மையில், ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஒற்றுமையை வலியுறுத்திய மோகன் பாகவத் பேச்சை வரவேற்கிறேன்.

நாட்டின் இஸ்லாமியா்கள் நன்கு படித்திருக்கிறாா்கள். அவா்கள் சுயதொழில் புரிந்து வாழ்ந்து வருகின்றனா். அவா்களுக்கு அரசு வேலையெல்லாம் தேவையில்லை. கலவரங்கள் நடக்காமல் இருந்தால், அவா்கள் அமைதியாகத் தொழில்புரிந்து வாழ்வாா்கள். இந்திய இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்’ .

இவ்வாறு கூறினார்.