டுப்பி

காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு சுகதர அதிகாரிகள் போல வந்து உள்ளே நுழைந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள முனியால் என்னும் ஊரில் வசிப்பவர் காங்கிரஸ் பிரமுகரான உதயா ஷெட்டி. இவருக்கு இரு இடங்களில் மீன் பண்ணைகள் உள்ளன. அத்துடன் இவர் வீட்டின் அருகே ஒரு முந்திரி தொழிற்சாலையையும் இவர் நடத்தி வருகிறார். இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் இவர் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கோரி மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய இல்லத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் போல சிலர் வந்துள்ளனர். அவர்கள் வந்த வாகனத்தில்கியசனூர் வன நோய் விழிப்புணர்வு திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவர்கள் அந்தப் பகுதியில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் அது குறித்து ஆலோசனை அளிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்ததும் தாங்கள் வருமான வரி அதிகாரிகள் என தெரிவித்து சோதனை இட்டுள்ளனர்.

வருமான வரி அதிகாரிகள் தாங்கள் சோதனை இடுவதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை. இந்த சோதனையில் உதயா ஷெட்டியின் வர்த்தகம் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமான வரி அதிகாரிகள் இது குறித்த எந்த ஒரு விவரமும் தெரிவிக்கவில்லை. இது வருமானவரி துறை சோதனை எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அதிகாரிகள் தெளிவு படுத்தி உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில், “நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உதயா ஷெட்டி வாய்ப்பு கோரி இருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆகவே மக்கள் மத்தியில் அவர் புகழைக் கெடுக்கவே இந்த சோதனை நாடகம் நடத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்ப்படுள்ளது.