புதுடெல்லி: லடாக்கில் சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது அதன் 5 விரல்கள் வியூகத்தின் ஒரு பகுதிதான் என்றும், திபெத்தில் நடந்ததை வைத்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் எச்சரித்துள்ளார் நாடுகடந்த திபெத் அரசாங்கத்தின்(மத்திய திபெத் நிர்வாகம்) தலைவர் லோப்சாங் சங்காய்.
சீன மக்கள் குடியரசை கடந்த 1949ம் ஆண்டு நிறுவிய மாசேதுங்கின் பரந்த திட்டங்களில் இதுவும் ஒன்று என்றுள்ளார் அவர்.
அவர் கூறியுள்ளதாவது, “திபெத் நாடு சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டபோது, மாசேதுங்கும் இதர சீன தலைவர்களும், ‘திபெத் என்பது உள்ளங்கை, அதை நாம் ஆக்ரமிப்பது கட்டாயம். அதன்பிறகு, நாம் 5 விரல்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றனர்.
அந்த 5 விரல்களில் முதல் விரல் லடாக். அடுத்து நேபாளம், பூடான், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம். கடந்த 2017ம் ஆண்டு டோக்லாமில் நடந்த சம்பவம் மற்றும் தற்போது லடாக்கில் நடைபெறும் சம்பவங்கள் இந்த வியூகத்தின் தொடர்ச்சியே. இதுதொடர்பாகத்தான் கடந்த 60 ஆண்டுகளாக திபெத்திய தலைவர்கள் இந்தியாவை எச்சரித்து வருகிறார்கள். நேபாளம், பூடான் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே சிக்கல் நிலவுகிறது” என்றுள்ளார் அவர்.
“சீனா தரப்பில் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உரிமைகோரல்கள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் கருத்து கூறப்பட்டிருந்த நிலையில், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர், “தனது பிராந்திய இறையாண்மையை பாதுகாக்கும் சீனாவின் உறுதியான நடவடிக்கைகளை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது” என்று பதில் கருத்து கூறப்பட்டது.