ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இஎஸ்ஏ நிறுவனம் வடிவமைத்துள்ள சூரிய ஆராய்ச்சிக்கான தயாரித்துள்ள ப்ரோபா-3 செயற்கைக் கோள் விண்ணில் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்துவதாக அறிவித்து இருந்தது. ஆனால், கடைசி நேர தொழில்நுட்ப கோளாறால், விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மாலை விண்ணில் ஏவப்படும் என அறிவித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச.4) மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று மாலை மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து செயற்கைகோள் விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தயாராகி வருகின்றன.
இந்த ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.