சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் விளம்பரம் தேடி வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? என உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் காலை 9மணிக்கு தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக உண்ணாவிராத போராட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்தை, எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கள்ளக்குறிச்சியில் நடந்தது சாதாரண விஷயமா? இது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா? கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி சட்டசபையில் விவாதிக்காமல் வேறு எங்கு பேசுவது? என கேள்வி எழுப்பினார். சட்டசபையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக அரசு பேசவிடாமல் தடுக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக நாளை சந்திக்க உள்ளது என்றும் கூறினார்.
மேலும் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை; அப்போது திமுக எம்.பி.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் பேசினால் தடுக்கிறார்கள். நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா?.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறினார்.
அதிமுக உண்ணாவிரத போராட்டத்தையொட்டி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.