மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள் எம். செந்தில்குமார் மற்றும் திருமதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

நீதிபதி பி.என். பிரகாஷ் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு பழைய பள்ளி வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவது தெரிந்தது.
கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜில் பல ஆண்டுகளுக்கு முன்பு குழுவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததாகவும் அதில் பலர் நீக்கப்பட்டு தற்போது வெறும் ஐநூறு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சாய் சமாஜத்திற்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதும் அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகக் குழு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததை அடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து செல்வராஜ் மற்றும் இரண்டு பேர் அடங்கிய நிர்வாகக் குழுவை கலைத்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கே.என்.பாஷா (ஓய்வு) மற்றும் நீதிபதி பி.என்.பிரகாஷ் (ஓய்வு) ஆகியோரை கோயில் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவிட்டுள்ளது.
தவிர, கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய ஆடிட்டர்கள் அனந்த் ராமன் மற்றும் அருண் பாலாஜி-யை நியமித்துள்ள உயர்நீதிமன்றம் செப்டம்பர் 14ம் தேதி இதுதொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.