மும்பை: ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் ஏற்கனவே காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத நிலையில், அவர் அணியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே ரெய்னாவை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்காத நிலையில், தோனி திடீரென கேப்டன்சி பொறுப்பை ஜடேஜாவிடம் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தொடர் தோல்விகளும்  சிஎஸ்கே ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  பின்னர் கேப்டன்சி பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகுவதாக அறிவித்து, தோனி மீண்டும் கேப்டன்சி பொறுப்பு ஏற்றதும், சிஎஸ்கே அணியில் உள்ள குளறுபடிகளை வெளிச்சம்போட்டு காட்டியது.

இந்த நிலையில், சிஎஸ்கே  டெல்லி அணிகளுக்கிடையே கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியின்போது,  முன்னாள் கேப்டன் ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்திய நிலையில்,  காயம் காரணமாக இந்த போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்பிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்த நிலையில், போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களைச் சேர்த்தனர். இந்த சீசனில் 10 போட்டிகளில் 7ல் தோல்வியுற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் இருந்தது.  டெல்லி அணியை வீழ்த்தி பெற்ற வெற்றி காரணமாக சிஎஸ்கே அணி சற்று முன்னேறி உள்ளது.  இன்னும் 3 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 12-ந் தேதி எதிர்கொள்கிறது.

முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்கும் பொது காயம் ஏற்பட்டிருந்தது.  இதன் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.