ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடுங்குளிர் காரணமாக, பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரின் பெரும்பாலான பகுதியில் கடுங்குளிர் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வீடுகளை விட்டு வெளி வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 11.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. பகஸ்காமில் மைனஸ் 11.9 டிகிரி செல்சியஸாகவும், குப்வாராவில் மைனஸ் 3.1 டிகிரியாகவும், கோகெர்னாக் மைனஸ் 8.4 டிகிரியாகவும் பதிவாகி உள்ளது.

தெற்கு காஷ்மீர், தற்போது சில்லய்-கலான் என்னும் 40 நாள்கள் நீடிக்கும் ஒரு குளிர் அலையின் பிடியில் சிக்கியுள்ளது. அதன் காரணமாக ஸ்ரீநகரில்  புகழ் பெற்ற தால் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளும் உறைந்து காணப்படுகின்றன. டிசம்பர் 21ம் தேதி தொடங்கிய இந்த சில்லய்-கலான் ஜனவரி 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.