சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சியான இந்திய தேசிய லோக்தள் கட்சிக்கு, கடந்த 25 ஆண்டுகளில், முதன்முறையாக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தக் கட்சிக்கான ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த அக்கட்சியின் தலைவர் அபாய் செளதாலா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அபாய் செளதாலா, அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் மகன். இவர்களின் குடும்பம், இந்தியாவின் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பங்களில் குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, தனது பதவியை துறந்துள்ளார் அபாய் செளதாலா. இதன்மூலம், கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக, அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அக்கட்சியின் சார்பாக இந்த அபாய் மட்டுமே ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஹரியானா முதல்வர் மற்றும் துணைப் பிரதமர் தேவிலாலின் வம்சாவழியினர்தான் இந்த செளதாலாக்கள். கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த இந்திய தேசிய லோக்தள் கட்சி.