டில்லி
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர் குறித்த இந்தியச் சட்டத்தால் அவர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 2.8 கோடி பேர் உள்ளனர். இதில் சிங்கப்பூரில் 63,290 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் பணி நிமித்தமாக அந்நாடுகளுக்குச் சென்று அங்குக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு விசா இல்லாமல் நாடெங்கும் பயணம் செய்யவும் மேலும் இந்தியக் குடிமக்களுக்கு உள்ள பல உரிமைகளும் கிடைக்க வழி வகுத்தது. ஆனால் இவர்களுக்கு வாக்களிக்க, விவசாய நிலங்கள் வாங்க மற்றும் அரசுப் பணி புரிய உரிமை இல்லை.
ஆனால் மார்ச் 4 ஆம் தேதி அரசு ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இனி அரசு அனுமதி பெற்ற பிறகே எந்த ஒரு மத விழாக்கள், மலை ஏறுதல் மற்றும் பத்திரிகை நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனச் சட்டம் மாற்றப்பட்டது. அது மட்டுமின்றி வெளிநாட்டு அரசுகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவன பணியில் உள்ள இந்தியர்கள் இங்கு வரச் சிறப்பு அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்த புதிய சட்டம் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்திய மாணவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இந்தியக் குடிமகன்கள் எனக் கல்வி நிறுவனங்களில் பயில முடியாது. மாறாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்னும் பிரிவில் மட்டுமே பயில முடியும். இத்தகைய சட்டங்களினால் இந்தியாவுக்குத் திரும்ப வந்து வாழ விரும்பினாருக்குத் தடைகள் உண்டாகின.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கடந்த 2002 ஆம் ஆண்டு திரும்பி வந்த நரேன் தப்பேட்டா என்னும் வழக்கறிஞர், “இந்த புதிய சட்டத்தினால் எங்களுக்கு இந்தியாவில் வாழ்க்கை நடத்துவது கடினமாக உள்ளது. இது எங்களுடைய இந்தியாவில் வசிக்கும் உரிமை அடிப்படையில் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு எங்களது துயரைப் புரிந்து கொண்டு விரைவில் எங்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் என நம்புகிறோம். இது எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். உலகமயமாக்கலுக்கு இடையில் இந்த சட்டத்தின் மூலம் எங்களால் இந்தியாவுடன் எவ்வித தொடர்பும் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். பல வளர்ந்த நாடுகளில் இந்த சட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இவ்வாறு உள்ளது துயரத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அரசு இவ்வாறு சட்டம் பிறப்பித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தனது வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இந்த சட்டத்தின்படி இந்திய அரசு அவர்களை வெளிநாட்டினர் எனவே நினைப்பதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.