டில்லி
பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை முதிர்வாகியும் சில இந்திய வங்கிகள் திரும்ப அளிக்காமல் உள்ளன.
பரஸ்பர நிதி என்பது மக்களால் குறிப்பிட்ட காலங்களுக்கு வங்கிகளில் செலுத்தப்படும் முதலீட்டு பத்திரம் ஆகும். இந்த பணம் வங்கிகளால் வட்டிக்கு விடப்பட்டு நிதிப் பத்திரங்கள் முதிர்வடையும் போது பத்திர விதிகளுக்கு ஏற்ப வட்டியுடன் திருப்பி வழங்கப்படும். இந்த பரஸ்பர நிதி என்பது செலுத்திய பணம் திரும்ப கிடைக்கும் என்னும் நம்பிக்கையால் இந்திய மக்களிடையே வரவேற்புடன் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் இரு பெரிய பரஸ்பர நிதிகளின் உரிமையாளரான கொடாக் மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிதியை திருப்பி அளிக்காமல் உள்ளன. இது இந்த வங்கிகளின் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
சென்ற வாரம் கோடாக் பரஸ்பர நிதி, “நாங்கள் கடன் கொடுத்த நிறுவனங்களில் ஒன்றான ஜீ குழுமம் பணத்தை திருப்பி தராமல் உள்ளது. அந்த நிறுவனம் பணத்தை திருப்பித் தர எங்களிடம் கால அவகாசம் கேட்டுள்ளது. எனவே நாங்கள் எங்கள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையில் உள்ளோம்.” என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பரஸ்பர நிதி நிறுவனமான எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று முதலீட்டு தொகையை திரும்ப அளிக்க வேண்டிய தினமாக இருந்தது. அந்த தேதியில் முதலீட்டாளர்களுக்கு அந்நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்கவில்லை.
எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி நிறுவனம், “இந்த முதலீட்டு தொகை மறு முதலீட்டாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி குறைந்த கால முதலீட்டாள்ர்களுக்கு முழுத் தொகையை திரும்ப அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த தொகை மறு முதலீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” என முதலீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து பொருளாதார பேராசிரியர் அனந்த் நாராயண், “முதலீட்டாளர்கள் விருப்பமின்றி மறு முதலீடு அல்லது நீட்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அத்துடன் மொத்த முதலீட்டாளர்களில் 75%க்கும் மேற்பட்டோர் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி இல்லை எனில் ஒப்பந்தப்படி முதலீட்டை வட்டியுடன் திருப்பி அளிகக் வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அவர், “இந்த மறு முதலீடு குறித்து இன்னும் விவரம் வந்த பிறகு தான் மேலும் கருத்துக்கள் கூற முடியும். அதைப் போலவே கோடாக் நிறுவன அறிக்கையும் செல்லாததாகும். அவர்கள் நஷ்டமடைவதால் பரஸ்பர நிதியின் முதலீட்டாளர்களுக்கு அந்த நஷ்டத்தினால் பாதிப்பு உண்டாகும் என்பதும் சரியல்ல. எனவே அந்த நிறுவனம் விரைவில் பாக்கித் தொகையை அளிப்பது அனைவருக்கும் மகிழ்வை அளிக்கும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் வருடம் லேமன் சகோதரர்கள் என்னும் சர்வதேச முதலீட்டு வங்கி முழுகிப் போனதால் அனைத்து நாடுகளின் நிதிநிலைமையும் அபாயத்துக்கு உள்ளானது. இதை ஆங்கிலத்தில் லேமன் மொமெண்ட் என அழக்கின்றனர். தற்போது இந்திய வங்கிகளின் நிதி நிலைமை சீர் கெட்டு வருவதாகவும் இது இந்திய வங்கிகளின் லேமன் மொமெண்ட் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்ரனர்.