டில்லி
சீனாவுக்கு இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் டன் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது.
இந்தியாவில் தற்போது சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. நம் நாட்டில் சுமார் 70 லட்சம் டன் சர்க்கரை தேவைக்கு மேல் உள்ளது. முன்பு நாட்டில் சர்க்கரை தேவை உற்பத்தியை விட அதிகம் இருந்ததால் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததை அரசு தடை செய்தது. தற்போது தேவைக்கு மேல் சர்க்கரை உள்ளதால் மீண்டும் சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
சமீபத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து சர்க்கரை வாங்க சீன அரசு விருப்பம் தெரிவித்தது. ஏற்கனவே சீனாவுக்கு பிரேசில், தாய்லாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி குறித்து இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கமும் சீன சர்க்கரை நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது முதல் கட்டமாக சுமார் 10 லட்சம் அல்லது 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு சுமார் 35 கோடி அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த 2007 க்குப் பிறகு இந்தியா மீண்டும் சர்க்கரை ஏற்றுமதி செய்ய உள்ளது குறிப்பிடத் தக்கது.