புதுடெல்லி: தங்கள் நாட்டில் அணுசக்தி நிலையங்கள் எங்கெங்குள்ளன என்ற விவரங்கள் அடங்கியப் பட்டியலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ளன.

இதுதொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலத்தில் கடந்த 1988ம் ஆண்டு கையெழுத்தானது. ஆனால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதோ கடந்த 1991ம் ஆண்டு.

அப்போது முதல் கடந்த 29 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி இந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

போர் ஏற்பட்டால், இருநாடுகளிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தவிர்க்கவும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடம் இந்திய அணுசக்தி நிலையங்கள் குறித்தப் பட்டியலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்கள் குறித்தப் பட்டியலும் இன்று ஒப்படைக்கப்பட்டன.