கொழும்பு: இலங்கையில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் விதமாக, கொழும்பு நகரின் ஒரு துறைமுகத்தை விரிவாக்கும் பணியில் ஜப்பான் மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து, இந்தியாவும் ஈடுபடவுள்ளது.

நரேந்திர‍ மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், வெளியுறவுக் கொள்கையில் மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய முயற்சி கவனிக்கப்படுவதாய் இருக்கிறது.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா கலந்துகொள்வதும் இந்தப் புதிய ஒத்துழைப்பை உறுதிபடுத்தவதாய் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், சம்பந்தப்பட்ட 3 நாடுகளுக்கும் இடையில் இதுதொடர்பாக விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக்கம் செய்யப்படவுள்ள துறைமுகத்தில், கையாளப்படும் கண்டெய்னர்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்தை அதிகப்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில், பிஆர்ஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெல்ட் அண்ட் ரோடு செயலாக்க நடவடிக்கைகளில், சீனா ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.