டில்லி
கடந்த 2019 ஆம் வருடம் வங்கதேச மக்களுக்கு இந்திய விசா அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக நமது அண்டை நாடுகளை விட இங்குப் பல பொருட்கள் மலிவாகக் கிடைப்பதால் அவற்றை வாங்கிச் செல்லவும் பெருமளவில் வர்த்தகர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு இந்தியா வருபவர்களில் அதிகம் பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் இந்தியாவுக்கு வர அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் விசா அளித்து வருகிறது. முதல் தடவையாகச் சென்ற வருடம் அதிக அளவில் வங்க தேச மக்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது இது குறித்த தகவலை வங்க தேசத்தில் உள்ள இந்தியத் தூதரக பெண் அதிகாரியான ரிவா கங்குலி தாஸ், தெரிவித்துள்ளார்.
ரிவா கங்குலி தாஸ், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அதிக பட்சமாக வங்க தேச மக்களில் இந்திய வர சுமார் 6.5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த வருடம் அது 15 லட்சத்தை எட்டி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வர்த்தக நிமித்தமாக இந்தியா வந்துள்ளனர். குறிப்பாக ரம்ஜான் மற்றும் திருமணக் காலங்களில் பலர் இந்தியா வருகின்றனர்.
அத்துடன் பல வர்த்தக புள்ளிகள் இங்கு புதிய தொழில் தொடங்க வருகின்றனர். இதனால் இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியாக நல்ல லாபம் கிடைக்கிறது. இவ்வாறு வங்க தேச மக்கள் இந்தியாவுக்கு வருவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 2017 ஆம் வருடம் 13.8 லட்சம் பேருக்கு விசா வன்ழங்கப்ப்ட்டது. 2018 ல் அது 14.6 லட்சத்தை எட்டி தற்போது 15 லட்சத்தை தாண்டி விட்டது. ” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட அமலாக்கத்துக்குப் பிறகு வங்க தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பில் விரிசல் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஒப்ப வங்க தேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.