சுதந்திரப் பவள விழா
பா. தேவிமயில் குமார்
பழம்பெரும் நாடு
நம் பாரதம்
சாரநாத் நமது புராதனம் !
தர்மத்தின் தாய்வீடு
நம் பாரதம்
தர்ம சக்கரம் நம்மிடம் !
வீரத்தின் விளைநிலம்
நம் பாரதம்
சிங்கமல்லவா அதன் சின்னம் !
அழகுக்கு இலக்கணம்
நம் பாரதம்
ஆடும்மயில் அதை அறிவிக்கும் !
தெய்வத்தின் திருவுரு
நம் பாரதம்
தாமரை அவள் சிம்மாசனம் !
சுதந்திர அன்னைக்கு
சுந்தர அணிகலன்
இச்சுதந்திரப் பவளவிழா !
எப்படிப் பெற்றோம்
இனிய சுதந்திரத்தை ?
எண்ணிப் பார்ப்போம்
இதனைநாம் காப்பதற்கு !
முன்னோரின்
துயரங்களை
தூக்குமேடைகள் துலக்கிடும் !
சிரமங்களை
சிறைச்சாலைகள்
சிந்திக்க வைக்கும் !
தியாகிகள் துறந்தது
உறக்கத்தை மட்டுமா ?
உயிர்களையும் தான் !
பகத்சிங்கும் பாரதியும்
பார்த்ததெல்லாம்
பஞ்சணைகளையல்ல,
பரங்கியரின் துப்பாக்கியை !
ஜாலியன் வாலாபாக்
இது,
புனித யாத்திரை
போக வேண்டிய
புண்ணியஸ்தலம் !
தண்டிக் கடற்கரை
இங்கு உரிமைக்குரல்
இன்றும்
உரக்க எதிரொலிக்கும் !
கயத்தாறு
இது,
கண்ணியத் தமிழனின்
கதை சொல்லும் பூமி !
அந்தமான்
அது,
சுதந்திர வீரர்கள்
சுற்றிய சுந்தர பூமி !
போராட்ட வரலாறென்பது
போற்ற வேண்டிய
மற்றொரு புண்ணிய நூல் !
பெற்ற சுதந்திரத்தைப்
பேணுவதற்கு
உற்றமா மருந்து
ஒற்றுமை !
பாரத அன்னைக்கு
இனி நாம் செய்வதென்ன ?
சிந்திப்போம்
செயல்படுவோம் !
நாசமாக்காதீர்
நதிநீருக்காக
நாட்டுப் பற்றினை
நாசமாக்காதீர் !
மதவேறுபாட்டை
மறந்து விடுங்கள்
நீங்கள்
மகான்களாவீர் !
சாதிகளைச்
சாடுங்கள்
நீங்கள்
சான்றோராவீர் !
தேசப் புகழ்
காத்திடுங்கள்,
நீங்கள் தெய்வப்புகழ் பெறுவீர் !
நாட்டு நலனை
நாடுங்கள் நீங்கள்
நல்லோராவீர் !
தீவிரவாதத்தைக்
தீக்கிரையாக்குங்கள்
நீங்கள்
தீர்க்கதரிசியாவீர் !
பெண்மையினைப்
பேணுங்கள்,
நீங்கள்
பெரியோராவீர் !
இந்தப் புனித பூமியில்
பூக்களாய் பூத்திருக்க
புண்ணியம்
எத்தனை
புரிந்தோம் !
அருமை நிலத்தில்
அமர்ந்தாலே
போதும்
நாம்,
அழகுள்ளவராவோம் !
என்ன தவம் செய்தோமோ
இந்த நாட்டில் பிறந்திட !
தாய் வீடும், தாய் நாடும்
ஒன்றென எண்ணிடுவோம் !
ஒற்றுமையுடன் இருந்திடுவோம் !
வந்தே மாதரம் !
வாழ்க பாரதம் !!