சென்னை: வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல வணிக நிறுவனமான எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்ஜிஎம் குழுமம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டைய மாநிலங்களிலும் கிளைகளை வைத்துள்ளது. பொழுதுபோக்கு பூங்கா, மதுபானம் தயாரிப்பு, சொகுசு ஓட்டல்கள், போக்குவரத்து என பல நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் வரி ஏய்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் கடந்த 15ந்தேதி முதல், அந்நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு இன்று 4வது நாளாக தொடர்கிறது. சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அந்நிறுவன உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் பணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது.