இஸ்லாமாபாத்

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

 

பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.  எனவே அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்றாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் உதவி வழங்கும்படி பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது. இந்தக் கடன் வழங்க ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் உதவி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.  இதில் முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதித் தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.