காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்றிருந்தார். இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் தெரிவித்ததாவது:
“நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இங்கு வரவில்லை, மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன்.
குறுவை சாகுபடிக்கான காலம் வந்துவிட்டது. அதனை நினைவுபடுத்தி அதற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி, இந்த சந்திப்பு நடைபெற்றது.
அரசியல் தேவைகளை விட விவசாயிகளின் தேவையே மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றது. இரு மாநிலங்கள் மட்டுமன்றி, தேசிய அளவிலான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியுடனான இந்த சந்திப்பு கூட்டணி குறித்தது அல்ல, மக்களின் நலனுக்கானது, காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன்” என்று கமல் தெரிவித்துள்ளார்.