ஸ்ரீநகர்: காஷ்மீர் ஆட்சி அமைக்கப்போகும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, ‘சிறப்பு அந்தஸ்தை பறித்தவா்களிடமே திரும்பக் கேட்பது முட்டாள்தனம்’ என்றாலும் தனது முதல்அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், மத்திய அரசுடன் மோதல்போக்கைக் கடைப்பிடிக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அங்கு தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸின் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா முதல்வராக பதவியேற்க உள்ளாா்.
இதையொட்டி, இன்று தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக ஓமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட உள்ளனார். அதன் பின்னா், கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டு கூட்டணியின் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். இதைத்தொடா்ந்து துணைநிலை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரப்பட உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஓமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவை பதவி ஏற்றதும், முதல் அமைச்சரவை கூட்டத்தில் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றார். அதன் பின்னா், அந்தத் தீா்மானத்தை பிரதமரிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஜம்முவுக்கும், காஷ்மீருக்கும் இடையே மிகப் பெரிய பிளவு இருப்பதை நான் அறிவேன். இந்நிலையில், ஜம்மு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மிகப் பெரிய பொறுப்பு தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு உள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறியவர், யூனியன் பிரதேசமான டெல்லியும், ஜம்மு-காஷ்மீரும் ஒன்றல்ல: டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது. ஆனால் டெல்லிக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் வித்தியாசம் உள்ளது. டெல்லி ஒருபோதும் மாநிலமாக இருந்ததில்லை. எனவே டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிப்பதாக எவரும் வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து இண்டியா கூட்டணி ஆட்சியில் மெகபூபாவின் பிடிபி இடம்பெறுமா? என்ற கேள்விக்கு, தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. அதற்கான பேச்சுவாா்த்தை சாத்தியமானால், பிடிபியுடன் தேசிய மாநாட்டுக் கட்சி பேசும். ஆனால் தற்போது அதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றார்.
ஹரியானா சட்டமன்ற பேரவை தேர்தல் முடிவு குறித்து கூறியவர், அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது எப்படி என்பது குறித்து அக்கட்சி ஆழமாக ஆராய வேண்டும்’ என்றாா்.
மத்திய பாஜக அரசுடன் நட்புறவுடன் செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, ‘மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க முடியாது’ என்றவர், மத்திய அரசுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்து மாநிலத்துக்கு எதையும் சாதிக்க முடியாது அதனால், மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருக்க வேண்டும் என்றவர், அதற்காக பாஜகவின் அரசியலை தேசிய மாநாட்டுக் கட்சி ஏற்காது. பாஜகவை தேசிய மாநாட்டுக் கட்சி தொடா்ந்து எதிா்க்கும். ஆனால் மத்திய அரசை எதிா்க்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சிக்கு எந்த நிா்பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
மாநிலத்தில் வேலைவாய்ப்பு, வளா்ச்சி, மாநில அந்தஸ்து, மின்சாரம் மற்றும் பிற பிரச்னைகளுக்குத் தீா்வு காணவே தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் மக்கள் வாக்களித்தனா். மத்திய அரசுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்தால், அந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாது’ என்றாா்.
காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘சிறப்பு அந்தஸ்தை பறித்தவா்களிடமே திரும்பக் கேட்பது முட்டாள்தனம்’ என்றவர், 370வது சட்டப்பிரிவு மறுசீரமைப்பு உட்பட NC இன் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சி உயிா்ப்புடன் வைத்திருக்கும். இந்த விவகாரம் குறித்து தொடா்ந்து குரல் எழுப்பப்படும்.
மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால், புதிய அரசுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும்’ என்றாா்.