மதுரை: முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்து உள்ளார்.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்திருந்தார். அதாவது, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1, 2026 காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு முதலமைச்சர் மீதான அவரது கருத்தை மேம்படுத்தியது. தனது பயணத்தின் போது, அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கும் சென்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உறுப்பினர்கள் மற்றும் குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் ஊழியர்கள் உட்பட பல்வேறு சட்ட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களையும் சந்தித்தார்.
பின்னர், மதுரையில் நடைபெற்ற நீதிபதி நிஷா பானுவின் மகன் தயாகாந்த் கெவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் கட்ஜுவை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கட்ஜு, மதுரையில் ஜன. 31ல் நடந்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானுவின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அன்றைய தினம் நடந்த எங்கள் சந்திப்பிற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான எனது அபிப்ராயம் கணிசமாக உயர்ந்துள்ளது. நான் இதற்கு முன்பு அவரை விமர்சிப்பவனாக இருந்தேன். இருந்தபோதிலும், அவரது பெருந்தன்மையான செயலால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நான் திருமண வரவேற்பிற்கு சற்று முன்னதாகவே வந்து மேடையில் அமர்ந்திருந்தேன்.
பின்னர் நான் கீழே இறங்கி வந்து முன் வரிசையில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். அவரை மேடைக்கு அழைத்துச் சென்றனர். அவர் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவரிடம் நான் அங்கு வந்திருந்ததைப் பற்றி கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அவர் என்னைச் சந்திக்க விரைவாகக் கீழே இறங்கி வந்தார். ‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறிய அவர், ‘நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். ‘உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி’ என்றும் கூறினார்.
நான் இதற்கு முன்பு அவரை விமர்சித்திருந்தது தெரிந்திருந்தாலும், மிகவும் பெருந்தன்மையாகவும், மரியாதையாகவும் கூறினார்.
இவ்வாறு கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]