மும்பை:

ந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை,  மற்றவர்கள் அடையாளம் கண்டு விலகி இருக்க ஏதுவாக கை மணிக்கட்டில் முத்திரைக் குத்தும் பணி நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.   உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் உயிரிழப்பு 2 ஆக உள்ளது. அதே வேளையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க  மத்திய  மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காணும் வகையில் மகாராஷ்டிரா அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை,  மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் அவர்களது கை மணிக்கட்டு பகுதியில், முத்திரை குத்தப்படுகிறது. நான் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவன் என்பதை தெரிவிக்கும் வகையில் அந்த முத்திரையில் எழுத்துக்கள் உள்ளது.

தற்போது, மும்பை மாநகரின் பல பகுதிகளிலும் முத்திரைகள் குத்தும் பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். முத்திரை குத்தப்பட்டவர்கள்,  வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள உத்தவ் தாக்கரே அரச,  கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது குற்றச்செயல் அல்ல, ஆனால் மற்றவர்களுக்கும் இது பரவாமல் தடுக்க வேண்டிய கட்டாயம், அதற்காகவே இந்த நடவடிக்கை என்று தெரிவித்து உள்ளது.